காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடு, கட்டடங்களை கணக்கெடுத்து அப்புறப்படுத்தும் பணியில், வருவாய் துறையினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும், ஐந்து இடங்களில் 271 கோடி ரூபாய் மதிப்பிலான 32.25 ஏக்கர் நீர்நிலை பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, அரசியல்வாதிகள், அதிகாரம் படைத்தோரிடம் இருந்து மீட்கப்பட்டவை.மாவட்டத்தில், சந்தவேலுார் கிராமத்தில் குளம் இருந்த இடமே தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அவற்றை மீட்டு, மீண்டும் குளமாகவே மாற்றியமைக்கப்பட்டது. சமீபத்திய மழையால், குளம் முழுதும் நீர் நிரம்பியுள்ளது.பாப்பாங்குழி கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் 115 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஏக்கர் பரப்பளவிலான தாங்கல் புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது. இந்த இடத்தில், 'எக்கோ பாரஸ்ட்' எனப்படும் பறவைகள் வசிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட உள்ளது. வேடந்தாங்கல் போல, பறவைகள் வசிக்க, 15 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான மரங்கள் நட்டு பராமரிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிக ஆக்கிரமிப்புகளை உடைய 10 ஏரிகளை அடையாளம் கண்டு, அவற்றை மீட்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதுார், நத்தப்பேட்டை. ஏரிவாக்கம், வையாவூர், கோனேரிக்குப்பம், வரதராஜபுரம், காட்ராம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, நடுவீரப்பட்டு, எருமையூர் ஆகிய 10 ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன. முதற்கட்டமாக, அந்த ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை கணக்கெடுக்கவும், ஏரியின் ஆக்கிரமிப்பு பரப்பளவை அளக்கும் பணியிலும், வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அளவீடு செய்த பின், வருவாய் துறையினர் இரண்டு வகையான நோட்டீசும், பொதுப்பணித் துறை மூன்றாவது நோட்டீசும் வழங்குவர். மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க, குடிசை மாற்று வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.அடுத்த வடகிழக்கு பருவமழைக்குள்ளாக, ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முழுதுமாக நீக்கி, ஏரிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.-----------------------------------------------------------------------