சென்னை,-கஸ்துாரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், அங்கு பணியில் இல்லாத மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவ நிலைய அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்துாரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரிடம், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை, வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர், கழிப்பறை சுத்தமாக உள்ளதா போன்றவற்றை கேட்டறிந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனை முழுதும் ஆய்வு செய்தார்.மேலும், காலை 9:20 மணி ஆகியும், மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவ நிலைய அதிகாரி ஆகிய இருவரும் பணிக்கு வரவில்லை. அங்கிருந்த ஊழியர்களிடம், இருவரும் எத்தனை மணிக்கு பணிக்கு வருவார்கள் என, கேட்டறிந்தார். ஊழியர்கள் மழுப்பலான பதில் அளித்தால், கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ நிலைய அதிகாரி ஆகிய இருவரும், உரிய விளக்கம் அளிக்கும்படி, அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால், மருத்துவமனை வளாகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. அதேபோல், கடந்தாண்டு அக்டோபரில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனைகள் வளாகத்தில் இருந்த குப்பை அகற்றப்படாததால், கண்காணிப்பாளராக இருந்த வெங்கடேஸ்வரி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.