தாம்பரம்-சாலைகள், மழைநீர் கால்வாய்கள் பராமரிப்பில், தாம்பரம் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதால், பெருங்களத்துார் பகுதி மக்கள் அவதியடைகின்றனர்.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பேரூராட்சியாக இருந்தபோது முதல் தற்போது வரை, இப்பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமலும், மழைநீர் கால்வாய்கள் துார் வாரப்படாமலும் உள்ளன.இதில், பெருங்களத்துார் பகுதிக்கு உட்பட்ட, முத்துவேலர் தெரு, அப்துல் கலாம் பூங்கா எதிரே உள்ள சாலை, புத்தர் நகர் குறுக்கு தெரு, பாரதி அவென்யூ பிரதான சாலை, காமராஜர் பிரதான சாலை உட்பட 10க்கும் மேற்பட்ட தெருக்கள்.அதேபோல், பீர்க்கன்காரணை பகுதியில், சிதம்பரனார், கலைவாணி, விவேகானந்தர் தெருக்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட தெருக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும், பழைய, புதிய பெருங்களத்துார் பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் முற்றிலும், துார் வாரப்படாமலும் ஆங்காங்கே சேதமடைந்தும் காணப்படுகின்றன.மாநகராட்சியாக தரம் உயர்ந்து, இந்த மூன்று மாதங்களில், இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஒட்டுப்போடும் பணிகளும், கால்வாய்களில் சாதாரணமாக கூட, துார் வாரும் பணிகளும் நடைபெறவில்லை.இதனால், சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைகளில் காணப்படும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி அவதியடைகின்றனர்.அதேபோல், துார் வாராமல் குப்பை மற்றும் கழிவுநீர் நிறைந்து நிற்கும் கால்வாய்களால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.