சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் அமைந்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அப்பகுதி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றளவில் பாதாள சாக்கடை திட்டம் கானல் நீராக உள்ளது.இதனால், பெரும்பாலான வீடுகளின் கழிவுநீர், முறைகேடாக மழைநீர் வடிகாலில் விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்த்திக்கேயபுரம் பகுதி வீடுகளின் கழிவுநீர் மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது.மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, ராஜராஜேஸ்வரி நகர், இரண்டாவது குறுக்கு தெருவில் கழிவுநீர் தினசரி பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பகுதி வாசிகள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, வடிகாலில் விடப்படும் கழிவுநீர் இணைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது