தாம்பரம்--தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், காலி மனைகளை முறையாக பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஏகப்பட்ட காலி மனைகள் உள்ளன. அதன் உரிமையாளர்கள் மனைகளை வாங்கியதுடன், அதை முறையாக பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். பல ஆண்டுகளாக இப்படி கிடப்பதால், குப்பை கொட்டும் இடமாக மாறியதோடு, புதர்மண்டி காணப்படுகிறது.மற்றொரு புறம், மழை காலங்களில், காலி மனைகளில் தேங்கும் வெள்ளம், பல மாதங்கள் அப்படியே உள்ளது. இதனால், பாசி படிந்து பச்சையாக மாறிவிடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் சூழல் ஏற்படுகிறது.இதனால், ஒவ்வொரு பகுதியிலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.குறிப்பாக, காய்ச்சல் ஏற்படுவதற்கு, காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரே முக்கிய காரணமாக உள்ளது. இதனால், காலி மனைகளில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மனைகளை வாங்கி போடும், அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காததே இதற்கு காரணமாகும். இந்த நிலையில், இது குறித்து, அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மாநகராட்சி பகுதிகளில், ஏகப்பட்ட காலி மனைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஒவ்வொரு உரிமையாளரின் விபரங்களை சேகரித்து, மனைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' வழங்க, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.நோட்டீஸ் வழங்கிய பின், காலி மனைகளில் குப்பை கொட்டுவதோ, மழைநீர் தேங்குவதோ இருக்கக்கூடாது.அதை மீறி, வழக்கம்போல் அலட்சியமாக இருந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துஉள்ளார்.