மாதவரம்--செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பாலகணேச நகரைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 29; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, மாதவரம் புதிய ஜவஹர்லால் நேரு, 200 அடி சாலையில் லாரி ஓட்டிச் சென்றார். அப்போது, புழல் அடுத்த விளாங்காடுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் பொன்பாண்டியன், 39, என்பவர், இரு சக்கர வாகனத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்றார். ஆனால், முன்னால் சென்ற லாரியால், அவருக்கு வழி கிடைக்கவில்லை.இதனால், முந்திச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது, முன்னால் சென்று, லாரியை வழிமறித்து நிறுத்தி, லாரி டிரைவர் ஹரிபிரசாத்திடம் தகராறு செய்தார். அப்போது, தன்னிடம் இருந்த கத்தியால், ஹரிபிரசாத்தின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், பொன்பாண்டியனை கைது செய்தனர்.