பம்மல்--பம்மலில், கழிவு நீர் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில், மகனுடன் சென்ற தந்தை பரிதாபமாக இறந்தார்.பல்லாவரம், அரசமரம் தெருவை சேர்ந்தவர் குப்பன், 48. கார்ப்பென்டர். அவரது மகன் அஜய், 23. நேற்று காலை, தந்தை, மகன் இருவரும், இருசக்கர வாகனத்தில் பம்மல் நோக்கி சென்றனர். பல்லாவரம்--- பம்மல் சாலையில், எச்.டி.எப்.சி., வங்கி அருகே சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த கழிவு நீர் லாரி மோதி, குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்துக்கு காரணமான, லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், சமீபகாலமாக, கழிவு நீர் லாரிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. முறையான பயிற்சி பெறாத ஓட்டுனர்கள், லாரிகளை இஷ்டத்திற்கு அதிவேகமாக ஓட்டுகின்றனர். இதனால், பல்லாவரம்- பம்மல் சாலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. போலீசார், கழிவு நீர் லாரிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்தும், நெரிசலும் குறையும்.