பேரம்பாக்கம்-பேரம்பாக்கம் ஊராட்சியில், கிராம சேவை மையம் சேதமடைந்து 'பார்' ஆக மாறிய அவலம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 2014-15ம் ஆண்டு, 14.55 லட்சம் மதிப்பில், கிராம சேவை மையம் கட்டப்பட்டது.இந்த மையத்தை, ௨௦௧௭ம் ஆண்டு, மார்ச் மாதம் ௪ம் தேதி, அப்போதைய கலெக்டர் எ.சுந்தரவல்லி, திருவள்ளூர் எம்.பி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்துள்ளதாக கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்றதாக கல்வெட்டு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கட்டடம் திறக்கப்பட்ட நாள் முதல், இன்று வரை பயன்பாட்டிற்கு வராதது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், புதியதாக பொறுப்பேற்று தமிழக அரசு உத்தரவுப்படி கிராம சேவை மையங்கள் நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டது.இதையடுத்து, பேரம்பாக்கம் கிராம சேவை மையத்திற்கு நெல் மூட்டைகள் கொண்டு வந்த வாகனங்கள் மோதியதில் கட்டடத்தின் முன்புறம் சேதமடைந்தது. மேலும், தற்போது மது அருந்தும் 'பார்' ஆகவும் மாறி வருகிறது.ரூ.14.55 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.