ஊத்துக்கோட்டை--கொரோனா வைரஸ் கட்டுபாடுகளால், ஐந்து நாட்களுக்குப் பின், நேற்று, கோவில்கள் திறக்கப்பட்டதால், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த இரண்டு வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்தது. கடந்த, 14ம் தேதி முதல் போகி, பொங்கல் பண்டிகை ஒட்டி, அதிகளவு மக்கள் கூடுவர். இதனால், 14ம் தேதி முதல், 18ம் தேதி நேற்று வரை கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுபெரியபாளையம் பவானியம்மன் கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தைப்பூச தினத்தன்று கோவிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.சிலர் கோவிலுக்கு வந்து கோபுரத்தை தரிசனம் செய்தனர். ஐந்து நாட்களுக்குப் பின் நேற்று காலை கோவிலுக்கு உள்ளே சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.முக்கிய நாட்களில் வழிபட முடியாததால், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்தது.கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர்.சிறுவாபுரி பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.