திருத்தணி--திருத்தணி முருகன் கோவில், ஐந்து நாட்களுக்கு பின், நேற்று திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன், 28 உபகோவில்கள் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அரசு அறிவிப்பின்படி கடந்த, 14ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.அதே நேரத்தில் பக்தர்கள் இன்றி தினசரி நடக்கும் நித்ய பூஜைகள் நடந்து வந்தன. இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பின், நேற்று முருகன் கோவில் திறந்து காலை 6:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.முன்னதாக அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைரஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் தைப்பூச விழா நடந்த போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லாததால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே மலைக்கோவிலில் குவிந்து மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்தும் வழிபட்டனர்.பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் சிறப்பு கட்டண தரிசனத்திலும் திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.இன்று, ஒரு நாள் மட்டுமே முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அரசு அறிவிப்பின்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.