பொன்னேரி--வார்டு வரையறை செய்யப்பட்டதில், பிரச்னைக்குரிய பகுதியுடன் தங்களது தெருவை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பேரூராட்சியில் இருந்து, பொன்னேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு வரையரை செய்யப்பட்டு உள்ளது. இதில், 27,456 வாக்காளர்களை, 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வேதகிரி தெரு, இரண்டாக பிரித்து, வார்டு 1 மற்றும் 2ல் சேர்க்கப்பட்டு உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, குடியிருப்புவாசிகள், வாக்காளர் அடையாள அட்டைகளுடன் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின்போது, 'கடந்த பல ஆண்டுகளாக வேதகிரி தெரு மொத்தமும், ஒரே வார்டில் இருந்தது. தற்போது தெருவில், பாதி குடியிருப்புகளை, 2வது வார்டுடன் இணைக்கப்பட்டு உள்ளது.தங்களுக்கும், புதியதாக இணைக்கப்பட்டுள்ள வார்டில் உள்ளவர்களுடன் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. அவை சட்டம் - -ஒழுங்கு பிரச்னையாகவும் நீடிக்கிறது.எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வேதகிரி தெரு முழுதையும், 1வது வார்டுடன் இணைக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகளிடம், நகராட்சி ஆணையர் தனலட்சுமி, பேச்சு நடத்தினார். பொதுமக்களின் எதிர்ப்பு குறித்து, கலெக்டரிடம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.