மானாமதுரை : கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக அம்மன் கோயில்களில் பொங்கல் விழாக்கள் ரத்தாகும் சூழல் உள்ளதால் மானாமதுரையில் தீச்சட்டிகள் தேக்கமடைந்துள்ளன.
மானாமதுரையில் ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருள் தயாரிக்கின்றனர். வரவுள்ள தை, மாசி, பங்குனி மாதங்களில் அம்மன் கோயில்களில் நடைபெறும் பொங்கல் விழாக்கள் கொரோனா தாக்கத்தின் காரணமாக ரத்து செய்யப்படும் சூழ்நிலை உள்ளது. இதையடுத்து மானாமதுரையில் இந்த விழாக்களுக்காக தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தீச்சட்டிகள் தேங்கியுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மண் பாண்ட தொழிலாளர் கார்த்திகா கூறியதாவது, திண்டுக்கல், நத்தம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, தாயமங்கலம், பந்தல்குடி, சாத்தூர், விருதுநகரில் நடக்கும் பொங்கல் விழாக்களுக்காக மானாமதுரையில் தீச்சட்டிகள் ஆயிரக்கணக்கில் தயாரித்து வைத்துள்ளோம், ஆனால் கடந்த 2 ஆண்டாக கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான ஊர்களில் பொங்கல் விழாக்கள் ரத்து செய்து, தீச்சட்டிகள் தேங்கியுள்ளன என்றார்.