திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 12 அரசு மருத்துவமனைகள் உட்பட 86 இடங்களில் இன்று 'பூஸ்டர்' டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'பூஸ்டர்' டோஸ் செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. .
திண்டுக்கல்லில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களை கடந்த சுகாதாரம், முன் கள பணியாளர்கள், இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை 'பூஸ்டர்' டோஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.இதன்படி இன்று (ஜன.20) திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 86 இடங்களில் 'பூஸ்டர்' டோஸ் முகாம் நடக்கிறது. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 'பூஸ்டர்' டோஸ் செலுத்த தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 16.86 லட்சம் பேர், 2 வது தவணை தடுப்பூசி 12.87 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.