விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பருவமழையில் நிறைந்த கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளில் மீண்டும் ஆகாயத்தாமரைகள், பாசிகள் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளதால் வறட்சி ஏற்பட்டு , கோடையில் குடிநீர் தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2021ல் அதிகளவில் மழை பெய்தது. சராசரி மழையளவான 820.10 மி.மீ., அளவில் இருந்து கூடுதலாக 1030.15 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது. கண்மாய்கள், ஊரணிகள், குட்டைகள் அதிகளவில் நிரம்பி உள்ளன. எதிர்பார்த்ததை காட்டிலும் 125 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. தற்போது நீர்நிலைகளை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பது, பாசிகள் படர்வது போன்ற பல்வேறு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகாயத்தாமரைகளால் நீர் வெகுவிரைவில் ஆவியாகி வற்றுவதுடன் நீர்நிலையை முற்றிலும் பாதிப்படைய செய்து விடுகிறது. பாசி படர்வதும் ஒரு வகையில் நிலத்தடி நீரை பாதிக்கிறது. நல்ல மழை பெய்தும் மீண்டும் நீரானது பாசி, ஆகாயத்தாமரையால் பாழாவது கோடை காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் 50 சதவீதம் மட்டுமே நிறைந்த கண்மாய்கள் வெகுவிரைவில் வற்றி வருகின்றன. ஆகாயத்தாமரைகளை நீர்நிலைகளில் இருந்து அகற்றி மட்க செய்து நல்ல உரமாக பயன்படுத்தலாம். பாசிகளை நுண்ணுரமாக பயன்படுத்தலாம். இதை செய்ய அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை வழங்க வட்டார அளவிலான நீர் மேலாண்மை குழுக்களை அமைக்கலாம். பெய்த மழையை பாதுகாப்பதில் நாம் காட்டும் முனைப்பு ,வரும் ஆண்டுகளில் பெய்யும் மழையால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் இருப்பை அதிகரிக்க செய்யும். மாவட்ட நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறண்ட நிலை மாறும் மாவட்டத்தில் 2020ல் பெய்த மழையால் நீர்நிலைகள் அதிகளவில் நிரம்பி உள்ளன. வரும் ஆண்டுகளிலும் இதே அளவு மழை பெய்யுமா என தெரியாது. ஆனால் நீர்நிலைகளை முறையாக பராமரித்தால் நிலத்தடி நீர் மட்டம் சீராக உயரும். சிவப்பு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்திற்கு நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்தால் தான் குடிநீருக்கு தட்டுப்பாடு குறையும். மேலும் எப்போதும் நீர்நிலைகளில் நீர் இருப்பதால் வறண்ட நிலை மாறும். உள்ளாட்சி அமைப்புகளை பயன்படுத்தி நீர்நிலைகளை பாழ்படுத்தும் ஆகாயத்தாமரை, பாசிகளை அகற்ற வேண்டும்.பிரபு, தலைவர், கிராமப்புற பசுமை இளைஞர் நற்பணி மன்றம், விருதுநகர்.