கோவை: பள்ளி செல்லாத மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும், 36 ஆயிரம் சிறார்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 15-18 வயது வரையிலான சிறார்களுக்கு கடந்த ஜன.,3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில், 15- 18 வயதுடைய பள்ளி மாணவர்கள், 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் உள்ளனர்.
ஒவ்வொரு பள்ளிக்கும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் சென்று, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும், 12 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது.
பள்ளி செல்லாத மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும், 36 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 15- 18 வயது வரை உள்ள சிறார்கள், 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் உள்ளனர். அதில், 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் விடுமுறை என்பதால், 12 ஆயிரம் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
''பள்ளி செல்லாத மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும், 36 ஆயிரம் சிறார்கள் சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் கண்டறிந்து, தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்றார்.