பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் செய்வதால், ஆம்புலன்ஸ் சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, சுற்றுப்பகுதி கிராம மக்கள், பழங்குடியின மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனை விரிவாக்கம் செய்து, புதியதாக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா காணப்பட்டது.இந்நிலையில், புதிய கட்டடத்தின் முன், வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் போதும்; அவசர சிசிச்சைக்காக மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் கோவைக்கு அழைத்து செல்லும் போதும் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.'பார்க்கிங்' இல்லைபொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்களை நிறுத்திச் செல்வது வழக்கம். இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. பழைய, புதியதாக கட்டப்பட்ட கட்டங்களுக்குள் வாகனங்களுக்கு அனுமதியில்லை என, கூறப்படுகிறது. டாக்டர்கள் வாகனங்கள் மட்டும் நிறுத்த இடவசதி உள்ளதால், மற்ற வாகனங்கள் வெளியே நிறுத்த அறிவுறுத்தப்படுவதாக புகார் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் வாகனங்கள் தாறுமாறாக, 'கேட்' முன் நிறுத்தப்படுகிறது.இதனால், அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அங்கு ஆம்புலன்ஸ் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு மருத்துவமனை வளாகத்தில், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு வருபவர்களை, வாகனங்களை மருத்துவமனைக்குள் நிறுத்த அனுமதிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.