உடுமலை:நார் உற்பத்தி வாயிலாக வருவாய்க்கும், விளைநிலங்களில், உயிர் வேலியாகவும் பயன்படும் கற்றாழை ரகங்கள் பராமரிப்பு குறித்து, விவசாயிகளிடையே வேளாண்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், விளைநிலங்களிலும், மழை நீர் ஓடைகளின் கரைகளிலும், முன்பு உயிர் வேலியாக 'யானைக்கற்றாழை' எனப்படும் கற்றாழை ரகம் அதிகளவு இருந்தது. இக்கற்றாழையின் மடல்கள், இருபுறங்களிலும், ரம்பம் போன்று, வரிசையாக, கூரான முட்கள் இருக்கும்.அடர்த்தியாக, முட்களுடன் கூடிய இந்த கற்றாழை, வேலிகளில் இருக்கும் போது, கால்நடைகள் உள்ளே வர முடியாது. பல்வேறு பலன்களை இந்த கற்றாழை வாயிலாக, கிடைத்து வந்தது.ஆண்டுக்கு ஒரு முறை, நன்கு வளர்ந்த கற்றாழை மடல்களை அறுத்து, தண்ணீரில் ஊற வைத்து நார் பிரித்தெடுப்பார்கள். இந்த நார், பிளாஸ்டிக் கயிறுகள் அதிகம் பயன்பாட்டுக்கு வரும் முன்பு, விளைபொருட்களை கட்டுதல் உட்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வந்தது.மழை நீர் ஓடை கரைகளில், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு உட்பட காரணங்களால், கற்றாழை வெகுவாக அழிக்கப்பட்டு கிராமப்புறங்களில், பார்ப்பதே அரிதாகி விட்டது. முன்பு, தாராபுரம், தர்மபுரி உட்பட பகுதிகளில், கற்றாழை மடல்களில் இருந்து நார் பிரித்து, கோல்கட்டா உட்பட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.தற்போது, பல்வேறு பகுதிகளில், கற்றாழை நாரை பயன்படுத்தி கைவினை பொருட்களும் தயாரித்து வருகின்றனர்.விளைநிலங்களுக்குள், வனவிலங்குகள், புகுவதை தடுக்க உயிர்வேலியாக கற்றாழையை நட்டு பராமரிக்கலாம்; நார் உற்பத்தியை குடிசைத்தொழிலாக மேற்கொள்ள, வேளாண்துறை மூலம் வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தலாம் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.