வால்பாறை:அரசு அறிவித்துள்ள சம்பளத்தை பெற்றுத்தர, எம்.எல்.ஏ., தயக்கம் காட்டுவது சந்தேகமளிக்கிறது என, ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் குற்றம் சாட்டினர்.தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக, 425.40 ரூபாய் வழங்க வேண்டும், என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுக்கு எதிராக, சில தொழிற்சங்கங்கள், எஸ்டேட் நிர்வாகத்துடன் இணைந்து, இடைக்கால ஒப்பந்தம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.சில தொழிற்சங்கங்களின் நடவடிக்கையை கண்டித்தும், அரசு அறிவித்த சம்பளம் வழங்க கோரியும் வரும், 25ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நடைபெறவுள்ள போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், பிரபாகரன் (ஐ.என்.டி.யு.சி.,) கல்யாணி (ம.தி.மு.க.,) உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பேசியதாவது:தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த, 2001ம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வால்பாறையில் இருந்து வெளியேறி விட்டனர். சம்பள குறைப்புக்கு வால்பாறையில் உள்ள சில தொழிற்சங்கங்கள் தான் காரணம் என்பது, தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும்.இந்நிலையில், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள குறைந்த பட்சக்கூலியான, 425.40 ரூபாயை பெற்றுத்தர போராடி வரும் நிலையில், சில தொழிற்சங்கங்கள், அரசு அறிவித்துள்ள சம்பளத்திற்கு எதிராக இடைக்கால ஒப்பந்தம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.தொழிலாளர்களை பாதுகாக்க அரசு அறிவித்த சம்பளம் பெற்றுத்தருவது, தொழிற்சங்கங்களின் கடமை. தொழிலாளர் சம்பள பிரச்னையில் வால்பாறை எம்.எல்.ஏ., மவுனம் சாதிப்பது, தொழிற்சங்கங்களின் இடைக்கால ஒப்பந்தத்திற்கு, ஆதரவு அளிக்கும் விதமாக உள்ளது.இவ்வாறு, பேசினர்.