சாயல்குடி : சாயல்குடியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு வீடுகள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.
குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 2007ல் சாயல்குடியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர்.வீடுகள் இல்லாதோருக்கும், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு பெருவாரியான வீடுகளில் உள் வாடகைக்கு வீட்டின் உரிமையாளர்கள் விட்டு உள்ளதால் அதனை ஆய்வு செய்ய கூட முடியாத நிலையில் அதிகாரிகள் இருந்து வருகின்றனர்.அரசிற்கு மாதம் ரூ.250 வீதம் குடியிருப்போர் செலுத்த வேண்டும்.
தொடர்பில்லாத பயனாளிகளிடம் மாதம் ரூ.800 முதல் 1200 வரை பெற்றுக்கொண்டு மாத வாடகைக்கு விடும் அவலம் நடக்கிறது.12 ஆண்டுகளாக சாயல்குடி பேரூராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் உள்ளதால் அதற்கான அடிப்படைத் தேவை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஹவுசிங் போர்டு குடியிருப்புவாசிகள் கூறியதாவது; 10 ஆண்டுகளாக செப்டிக் டேங்க் அள்ளப்படாமல் கழிவுநீர் பாதையில் நிரம்பி வழிகிறது.
இதனால் குடிநீர் பைப் அருகிலேயே கழிவு நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் சுகாதார கேடு நிலவுகிறது.பகலிலும், இரவிலும் கொசு கடிப்பதால் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.எனவே குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அப்பகுதியினரின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.