சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராம பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையால் வெளி , உள் நோயாளிகள் தினமும் தத்தளிக்கும் நிலை உள்ளது.
மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள் நர்சுகள் பணிபுரியவில்லை. பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. தற்போது கொரோனா 3 வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சிறிய காய்ச்சல் என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400 க்கு மேற்பட்ட வெளி நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200க்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இது தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை.
இது தவிர பெரும்பாலான மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இ
ந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க வசதியாகவும் மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.............
காத்திருக்கும் நிலை
மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட பணியிடங்களில் டாக்டர்கள், நர்சுகள் இல்லை. அரசு மருத்துவமனைகளில், பணியிடங்கள் அதிகபட்சம் 80 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. ஒரு சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 சதவீதம் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் சிகிச்சைக்காக வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.ரவிசங்கர், சமூக ஆர்வலர், சிவகாசி..................