சின்னாளபட்டி : காலை நேர அரசு டவுன் பஸ் சேவையில் மாற்றத்தால், சின்னாளபட்டி பயணிகள் தவிக்கின்றனர்.
திண்டுக்கல், செம்பட்டி, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளுக்கு, சின்னாளபட்டி வழியே அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான பஸ்கள் திடீரென 'ட்ரிப்-கட்' செய்யப்படுவதால் அலுவலகம் செல்வோர், மாணவர்கள், காலை நேர பஸ்களையே நம்பியுள்ள தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். தற்போது சில நாட்களாக பஸ்கள் வந்து செல்லும் நேரம் மாறியுள்ளதால் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேட்டுப்பட்டி ராஜா கூறியதாவது: காலை 8:30 மணிக்கு பின், திண்டுக்கல்லுக்கு 9ஜெ வழித்தட பஸ் 9:25க்கு புறப்படும். இந்த பஸ்சேவையை பலநுாறு தொழிலாளர்கள், மாணவர்கள் நம்பியுள்ளனர். வழித்தடத்தை நீட்டித்துள்ளதாகக் கூறி, தற்போது 9:40க்கு பிறகே பஸ் வருகிறது. இதனால் ஒரு மணி நேரம் காத்திருந்து, நெரிசலாக பயணிக்க வேண்டியுள்ளது. கொடைரோடு, ஆத்தூர் உள்பட பல அரசு டவுன்பஸ்கள் இயக்கமும், நிச்சயமற்றதாக உள்ளது" என்றார்.