சேலம்:சேலம் - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முதல், மின் இன்ஜின் மூலம் இயக்கப் படுகிறது.
சேலம் - விருதாச்சலம் இடையே அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின், சென்னை எழும்பூர் - சேலம் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டது. தற்போது இப்பாதையில் மின் மயமாக்கல் பணி நிறைவடைந்து, கடந்த டிச., 27, 28ல் பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்து, மின் இன்ஜின் கொண்டு ரயில்களை இயக்க அனுமதி கொடுத்தனர்.
இதனால், சில நாளாக சரக்கு ரயில்கள், மின்தடத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல், எழும்பூர் - சேலம் இடையே மின் இன்ஜின் கொண்டு இயங்க தொடங்கியது. இரவு, 9:40க்கு சேலத்திலும், இரவு, 11:55க்கு சென்னையிலும் கிளம்பிய எழும்பூர் எக்ஸ்பிரஸ், முதன்முதலாக மின் இன்ஜின் கொண்டு, இத்தடத்தில் இயக்கப்பட்டன. மின்மயமாக்கலுக்கு பின், மின் இன்ஜின் மூலம் இயக்கப்படும் முதல் பயணியர் ரயில் இது.