அரூர்:பண தகராறில், அண்ணன் மகனை அடித்துக் கொன்ற இரண்டு சித்தப்பாக்களை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணன், 37. இவர், ஓராண்டுக்கு முன் நிலம் விற்ற பணத்தில், தன் சித்தப்பா முருகேசன், 52, என்பவருக்கு 1.50 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.இதை செல்லக்கண்ணன் திருப்பி கேட்டபோது, சிறுக சிறுக திருப்பி கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு செல்லக்கண்ணன், முருகேசனிடம் பணம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 8:00 மணிக்கு வீட்டின் மாடியில் செல்லக்கண்ணன் இருந்துள்ளார். அங்கு சென்ற முருகேசன் அவரது தம்பி சிவகுமார், 45, ஆகியோர் கதவை திறக்க கூறியுள்ளனர். செல்லக்கண்ணன் திறக்கவில்லை.
இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்ற இருவரும், இரும்பு ராடால் தாக்கியதில் செல்லக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். முருகேசன், சிவகுமார் இருவரையும், அரூர் போலீசார் கைது செய்தனர். கொலையான செல்லக்கண்ணனுக்கு ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது.