திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி துவங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தில், 4வது குடிநீர் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத குழாய்கள் பதித்து நகருக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள், முந்தைய குடிநீர் திட்டங்களில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், தாராபுரம் ரோடு, தண்ணீர் தொட்டி வளாகத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்காக பல ஆண்டாக அங்கு பயன்பாட்டிலிருந்த பழைய குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. புதிய தொட்டி கட்ட குழி தோண்டி அதற்கான பில்லர் அமைக்க இரும்பு கம்பிகள் கட்டி பணி நடந்தது. அதன் பின் தற்போது பல மாதங்களாகியும் மேற்கொண்டு கட்டுமானப் பணி தொடராமல் உள்ளது.
மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில், ''இந்த இடத்தில் தொட்டி கட்டும் பணியை எடுத்த சப் கான்ட்ராக்டர் உடல் நலமின்றி இறந்து விட்டார். இதனால், துவங்கிய பணி இடையில் நின்று விட்டது.தற்போது வேறிடத்தில் தொட்டி கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கட்டுமான தளவாடங்கள் மூலம் இங்கு கட்டுமானப் பணி விரைவில் துவங்கி செய்து முடிக்கப்படும்'' என்றனர்.