திருப்பூர்:கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டநிர்வாகம் சார்பில், கொரோனா பாதித்தோருக்கு உதவுவதற்காக வார்ட் ரூம் செயல்படுகிறது. கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆக்சிஜன் படுக்கை, சாதாரண படுக்கை விவரம்; மாவட்டத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையங்கள், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை.வீட்டுத்தனிமை படுத்திக்கொண்டோர் மருத்துவ சந்தேகங்கள், அரசின் 104 இலவச மருத்துவ உதவி குறித்த தகவல்களை, கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பெறலாம். 0421 1077, 2971199, 2971133 என்கிற எண்களில் மையத்தை தொடர்புகொள்ளலாம். கொரோனா பாதித்தோர், சிகிச்சைக்கு எந்த மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என வழிகாட்டுவதற்காக, திருப்பூர் மாநகராட்சியில் 4; ஊரக பகுதிகளில் 15 என, மொத்தம் 19 உதவி மையங்கள், கடந்த 10ம் தேதி முதல் இயங்கிவருகின்றன.தொற்று உறுதியானவுடன், நேரடியாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டாம்; பரிசோதனை முடிவுகளுடன், அருகிலுள்ள உதவி மையங்களை அணுகுங்கள். அம்மையங்களில் உள்ள மருத்துவர்கள் வழிகாட்டுதல்படி, அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கோ, கோவிட் சிறப்பு சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டுத் தனிமைக்குச் செல்லலாம்.