திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கொரோனா பாதிப்பு, 2022ம் ஆண்டில், இதுவரை இல்லாத வகையில் நேற்று உயர்ந்தது. ஒரே நாளில், 897 பேருக்கு தொற்று உறுதியானது.கடைசியாக கடந்தாண்டு, ஜூன் மாதம் முதல் வாரம், தினசரி பாதிப்பு, 800ஐ கடந்து பதிவாகியது. அதன்பின், 221 நாட்கள் கழித்து பாதிப்பு, நேற்று, 897 ஆகியுள்ளது. நேற்று, 432 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 99 ஆயிரத்து, 758 பேர் தொற்றில் இருந்து நலம் பெற்று 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.நான்கு நாட்களுக்கு முன், 500க்கும் கீழ் இருந்த தினசரி பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து நேற்று, 850ஐ கடந்து பதிவாகியதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 4,383 பேர் பல்வேறு பகுதியில் உள்ள தனியார், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.சுகாதாரத்துறை கணக்கீட்டின்படி, இவர்களில், 90 சதவீதம் பேர் (அதாவது, 2,500 க்கும் மேற்பட்டோர்) வீட்டு தனிமையில் உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.மாவட்ட மொத்த கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்து, 5,174 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தொற்று பலி இல்லை. தொற்றுக்கு இதுவரை மாவட்டத்தில், 1,033 பேர் இறந்துள்ளனர்.