கோவை:கொரோனா பரவல் காரணமாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்குள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2020ல் கொரோனா தொற்று பரவியபோது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். அதனால், அலுவலகம் சில நாட்கள் மூடப்பட்டது. பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டது. அதுபோன்ற சூழல் தற்போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக செயல்படுகின்றனர்.செல்வபுரத்தில் உள்ள இந்த அலுவலகத்துக்கு வருவோர், கண்டிப்பாக இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்; முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இரு நுழைவாயில்களும் மூடப்பட்டு, காவலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.அரசு அலுவல் நாட்களில், காலை, 11:30, 1:30, 3:30, 5:30 மணியளவில், ஒவ்வொருவராக அனுமதிக்கப்படுகின்றனர்.தலைமை பொறியாளர் ராஜசேகர், நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர், அலுவலக வளாகத்தில் நின்று, பொதுமக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிகின்றனர்.ஊழியர்களை வரவழைத்து, சமூக இடைவெளியுடன் நின்று, அவர்களுடன் பேசி, கோரிக்கைகளை பதிவேட்டில் குறிப்பிட்டு, உடனடியாக தீர்வு ஏற்படுத்தி, அனுப்பி வைக்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனர். யாருக்கேனும் தொற்று பரவினால், மற்றவர்களும் பாதிப்படைந்து, அலுவலகத்தை மூட வேண்டிய நெருக்கடி ஏற்படும். 'அத்தகைய சூழல் வரக்கூடாது என்பதால், நாங்களே வெளியே நின்று, மக்களை சந்திக்கிறோம்' என்றனர்.