கோவை:லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் சத்யபிரபா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் உதவி வருவாய் அலுவலராக சத்யபிரபா பணியாற்றியபோது, பில் கலெக்டராக பணிபுரிந்த யுவராஜ் என்பவருடன் இணைந்து, போலி ரசீது, போலி முத்திரை தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, இரு அதிகாரிகள் மீதும், 9 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தி, வழக்குப்பதிவு செய்தது. அனுமதியற்ற கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையில், 61, 64வது வார்டுகளில் மட்டும், 7 லட்சத்து, 57 ஆயிரத்து, 430 ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, தெற்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் பொறுப்பில் இருந்து சத்யபிரபா விடுவிக்கப்பட்டு, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தெற்கு மண்டலத்துக்கு புதிய அதிகாரி இன்னும் நியமிக்கவில்லை.ஆய்வு போதாது; இன்னும் வேண்டும்உதவி வருவாய் அலுவலர் பதவியில் இருப்பவர்கள், 20 வார்டுகளில் வரி வசூல் பணியை கவனிப்பர். 2 வார்டுகளில் நடந்த முறைகேடு மட்டுமே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.அதனால், சத்யபிரபா பணியில் இருந்த காலத்தில் கையாண்ட அனைத்து கோப்புகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தெற்கு மண்டலத்தில் பணிபுரிந்த காலத்தில் கையெழுத்திட்ட கோப்புகளையும், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி பெயரில் போலி ரசீது அச்சடித்ததோடு, போலி முத்திரை தயாரித்து பயன்படுத்திய குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், மாநகர குற்றப்பிரிவு போலீசில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் புகார் கொடுக்க வேண்டும்.எச்சரிக்கை என்னாச்சு?'அரசு அலுவலர்கள் தவறு செய்தால், 'டிஸ்மிஸ்' நடவடிக்கை பாயும்' என, சில மாதங்களுக்கு முன், தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்ட காரணத்துக்காக, மாநகராட்சி அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்வதோடு, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.