செஞ்சி-திண்டிவனம்- கிருஷ்ணகிரி வரையிலான சாலை விரிவாக்கப் பணி துவங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையே 178 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஏழு மீட்டராக உள்ள இச்சாலையை ரூ.610 கோடி மதிப்பில் 10 மீட்டர் விரிவாக்கம் செய்யும் பணி 2012 மே மாதம் துவங்கியது.ஆந்திராவைச் சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. 2014 மே மாதம் பணிகளை முடிக்க வேண்டும். மத்திய அரசிடம் ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மாநில அரசுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது வழக்கம். காங்., கட்சியின் தயவால் ஒப்பந்தம் பெற்ற டிரான்ஸ்ட்ராய் நிறுவனம் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவில்லை. இதன் விளைவாக மாநில அரசு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. இதனால் இதுவரை 50 சதவீத பணிகள் கூட முடிக்கப்படவில்லை. அதோடு மத்தியில் ஆட்சி மாற்றத்தால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு டிரான்ஸ்ட்ராய் பணிகளை தொடராமல் நிறுத்தியது. இதனால் சாலைகள் படுமோசமானது. செஞ்சி மற்றும் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைகளை விரைவாக முடிப்பதாக கோர்ட்டில் உறுதியளித்தது.இதன் பிறகு டிரான்ஸ்ட்ராய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், எஞ்சி இருந்த பணிகளைச் செய்ய 2019ம் ஆண்டு 484 கோடி ரூபாய்க்கு புதிதாக டெண்டர் கோரியது.தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பி.கே., நிறுவனம் டெண்டர் எடுத்தது. 2019 நவம்பர் மாதம் பணிகளைத் துவங்கியது. 20 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டு, இரண்டாவது முறையும் குறித்த காலத்தில் பணிகள் முடியவில்லை.இதுவரை 178 கி.மீட்டரில் 100 கி.மீ., துாரத்திற்கு பணிகளை முடித்திருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் கூறப்படுகின்றது.கடந்த ஆண்டில் பெய்த கன மழையால் ஏரிகள் நிறைந்து மண் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைகளை விரைவாக முடிக்க முடியவில்லை என எஸ்.பி.கே., நிறுவனம் கூறுகிறது. இப்போதுள்ள நிலையில் பணிகள் முடிய மேலும் ஓராண்டு ஆகும். 2012ல் பணிகள் துவங்கிய போதே புதிய திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகளாக சாலையை புதுப்பிக்காமல் இருந்தனர்.அப்போதே சாலையின் பெரும் பகுதி போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. நாளுக்கு நாள் சாலையின் நிலை மோசமானதால் 2017ல் செஞ்சி கோர்ட், இச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்தது.இதையடுத்து 19 கோடி ரூபாய் மதிப்பில் தற்காலிக பழுது பார்க்கும் பணியை செய்தனர். அதன் பிறகு பல கனமழைகளை சந்தித்ததால் சாலையின் நிலை படுமோசமாகியுள்ளது. பல இடங்களில் விபத்து ஏற்படுத்தும் அளவில் பள்ளங்கள் உள்ளன. இச்சாலையில் செல்வதால் சிறிய ரக வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர். சரக்கு லாரிகள் மற்றும் கார்களில் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு செல்பவர்கள் வேலுார் வழியாக சுற்றி செல்கின்றனர்.அடுத்து வரும் நாட்களில் சாலைகளின் நிலை மேலும் மோசமாகும். இதனால் விபத்துகள்; உயிரிழப்புகள் ஏற்படும். போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையை மத்திய, மாநில அரசுகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மக்களின் உயிர் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலதாமதம் செய்யாமல் கந்தலாகிப்போன சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகரங்களில் அவதிதிண்டிவனம், செஞ்சி, கீழ்பென்னாத்துார், திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, சாமல்பட்டி, மத்துார் ஆகிய ஒன்பது இடங்களில் புறவழிச்சாலை அமைக்கின்றனர். புறவழிச்சாலை துவங்கும் இடம் முதல் முடியும் இடம் வரை நகர பகுதியாக உள்ளது. இச்சாலைகள் டெண்டர் பணியில் வரவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையமே சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.இதில் கீழ்பென்னாத்துார், திருவண்ணாமலை பகுதியை மட்டும் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து விட்டனர். இந்த சாலைகள் நல்ல முறையில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள திண்டிவனம், செஞ்சி, செங்கம், சிங்காரப்பேட்டை உள்ளிட்ட 7 நகர பகுதிகளில் சாலைகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.ஒத்துழைப்பு இல்லைமத்தியில் 2011ல் காங்., ஆட்சியின் போது அக்கட்சி எம்.பி.,யின் டிரான்ஸ்ட்ராய் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. பிறகு பா.ஜ., ஆட்சி ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய, மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் டிரான்ஸ்ட்ராய் நிறுவனம் இழப்பை சந்தித்தது.இரண்டாவது டெண்டரில் 2019ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது எஸ்.பி.கே., நிறுவனம் டெண்டர் எடுத்தது. அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகரின் ஆசி பெற்ற நிறுவனம் என்பதால் துவக்கத்தில் ஏரிகளில் விதிமுறைகளை மீறி மண்ணை எடுத்து சேமித்து வைத்தனர்.படுவேகமாக நடந்த வேலைகள் ஆட்சி மாறிய பின் மந்தமானது. அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைந்ததுடன், ஏரிகளில் மண் எடுக்க மிக குறுகிய காலத்திற்கு மட்டும் அனுமதி கொடுப்பதும் வேலைகள் தாமதமாக காரணமாகி வருகிறது.அழிக்கப்படும் வாய்க்கால்புதிதாக அமைக்கும் சாலைகளின் குறுக்கே வயல்களுக்குச் செல்லும் ஏரி பாசன வாய்க்கால்களை சரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் திட்டம் தயாரித்து விட்டனர். இப்போது வாய்க்கால்களை அழித்து அதன் மீது சாலை அமைக்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், பாசன வாய்க்கால்கள் பயன்பாட்டில் இருந்து அழிந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடிக்குச் செல்ல வழி வகுக்கும். இது போன்ற இடங்களில் பாசன வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் போராடி வருகின்றனர்.ஒரு ஆண்டில் சுங்கவரி178 கி.மீ., துார பயணத்தில் செஞ்சி - திண்டிவனம் இடையே வடவானுாரிலும், திருவண்ணாமலை - செங்கம் இடையே அத்தியந்தலிலும், மத்துார் - கிருஷ்ணகிரி இடையே மத்துார் அருகிலும் சுங்கவரி வசூல் மையம் அமைக்க உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இடங்களில் சுங்கவரி மையங்கள் அமைந்து விடும்.அம்புலன்ஸ்சில் அவதிதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குறிப்பிடும் அளவிற்கு பெரிய மருத்துவமனைகள் இல்லை. இந்த மாவட்டங்களில் இருந்து செஞ்சி வழியாகவே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்கள் செல்கின்றன.சாலைகள் மோசமாக இருப்பதால் ஆபத்தான நிலையில் உள்ளவர்களை குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க ஆம்புலன்ஸ் டிரைவர்கள் படாதபாடு படுகின்றனர்.அமைச்சர்கள் கவனம்செலுத்துவார்களா?திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்க பணி 10 ஆண்டாக முடியாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த அமைச்சர் வேலு, செஞ்சியைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தான் இருவரும் இந்த சாலையிலேயே அதிகம் பயணிக்கின்றனர். எனவே இப்பிரச்னையில் இரு அமைச்சர்களும் தலையிட்டு விரைவாக தீர்வு காண வேண்டும்.