விழுப்புரம்-விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி ஈ.வெ.ரா., சிலை சேதமடைந்ததை கண்டித்து தி.மு.க.,வினர் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, நெட்டப்பாக்கம் தனியார் நிறுவனத்தில் இருந்து கண்டெய்னர் லாரி டயர் லோடுடன் நேற்று முன்தினம் இரவு மஹாராஷ்டிரா மாநிலம், புனே நோக்கிச் சென்றது.விழுப்புரம், காமராஜ் சிலை வளைவில் இரவு 11:10 மணியளவில் திரும்பியது. அப்போது, 5 அடி உயரத்தில் இரும்பு கூண்டிற்குள் இருந்த ஈ.வெ.ரா., சிலை மீது மோதியதில் பீடத்துடன் சிலை பெயர்ந்து சேதமானது.எஸ்.பி., ஸ்ரீநாதா, ஆர்.டி.ஓ., அரிதாஸ், தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் விழுப்புரம் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது தி.மு.க., நகர செயலாளர் சக்கரை தலைமையிலான நிர்வாகிகள், திட்டமிட்டு சிலையை சேதப்படுத்தியதாகவும், டிரைவரை கைது செய்யக்கோரியும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் நான்குமுனை சிக்னல் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.லாரியை அஜாக்கிரதையாக ஓட்டி சிலையை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிந்து லாரி டிரைவர் மஹாராஷ்டிரா மாநிலம், வால்கி பகுதியைச் சேர்ந்த மச்சிந்திரசபலி, 52; என்பவரை கைது செய்தனர். இதையடுத்து தி.மு.க.,வினர் அதிகாலை 2:00 மணியளவில் கலைந்து சென்றனர்.இதனால், திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.நகர செயலாளர் ரகளைஈ.வெ.ரா., சிலை சேதமானதை அறிந்து அங்கு வந்த தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, அதிகாரிகள் மற்றும் போலீசாரை ஒருமையில் திட்டினார். பின், டவுன் போலீஸ் நிலையம் சென்றவர், லாரி டிரைவரை என்னிடம் ஒப்படையுங்கள். இல்லையென்றால் துப்பாக்கியைக் கொடுங்கள் என போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியே சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.