அன்னூர்:இறைச்சிக் கழிவுகளால் குளக்கரையில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.அன்னூரில், அத்திக்கடவு அவிநாசி திட்டம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது திட்டத்திற்கு குழிதோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.இதில் ஓதிமலை ரோடு சந்திப்பு, சத்தி ரோடு சந்திப்பு, தென்னம்பாளையம் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் குழிகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன.இதனால் அன்னூர் நகருக்குள் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக இயக்கப்படுகின்றன.மாற்று வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து, குளக்கரை சாலை வழியாக, ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி வழியாக சென்று வாகனங்கள் சத்தி ரோடு மற்றும் அவிநாசி ரோட்டை அடைகின்றன. குளக்கரையில் அதிகளவில் குப்பைகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ, சாக்கடை கழிவுகள் கொட்டப்படுகின்றன. ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் தயங்காமல் இங்கு கழிவுகளை கொட்டுகின்றன.இதுகுறித்து அன்னூர் மக்கள் கூறுகையில்,'குளக்கரை சாலை குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. 200 மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை கடக்க ஐந்து நிமிடம் ஆகிறது, குழிகளில் மண் இட்டு நிரப்பி சமன்படுத்த வேண்டும். மேலும் குளக்கரையை ஒட்டி இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டுவதை பேரூராட்சி தடை செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை பராமரிக்க வேண்டும்' என்றனர்.