புதுச்சேரி-மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு புறக்கணிக்கப் பட்டுள்ளது. உள் ஒதுக்கீடு இல்லாததால், நீட் தேர்வில் வெற்றி பெற்றும், அரசுப் பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு கானல் நீராகியுள்ளது.கடந்த காங்., ஆட்சியில், மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பப் பட்டது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி, அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பினார்.முதல்வராக இருந்த நாராயணசாமி, மத்திய அமைச்சர்களை சந்தித்து அனுமதி கோரியும், மத்திய பா.ஜ., அரசு வேண்டும் என்றே காலம் கடத்தி நிராகரித்தது.தற்போது என்.ஆர்.,- பா.ஜ., கூட்டணி அரசு அமைந்த பிறகும், அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு பெறும் எண்ணம் இல்லாமல் இருப்பது சரியல்ல.உள் ஒதுக்கீடு கிடைத்தால், ஆண்டிற்கு 40 மாணவர்கள் பயனடைவர். எனவே, அரசு இனியும் காலம் கடத்தாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.