சூலூர்:அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும், 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில் புதிய கூலி உயர்வை அமல்படுத்த கோரி, விசைத்தறி சங்கத்தினர் கடந்த, 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் கண்ணம்பாளையத்தில், விசைத்தறி சங்கங்களின் கூட்டு கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், சோமனூர் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. பல்லடம் தலைவர் வேலுசாமி முன்னிலை வகித்தார்.அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்க மறுத்து வரும் நிலையில், விசைத்தறி சங்கங்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பி வரும், சில ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும், 24ம் தேதி காரணம் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வரின் தனிப் பிரிவுக்கு, தபால்கள் அனுப்பவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கண்ணம்பாளையம் தலைவர் செல்வக்குமார், அவிநாசி தலைவர் முத்துசாமி, 63 வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன், தெக்கலூர், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.