புதுச்சேரி-புதுச்சேரி இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் கூலிப்படை தலைவன் தியாகு போலீசில் சிக்கியுள்ளார்.புதுச்சேரி, வாணரப்பேட்டை தாவீதுபேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி, 34. அவரது ஆதரவாளர் அந்தோணி, 25, ஆகியோர் கடந்தாண்டு அக்., 24ம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர்.முதலியார்பேட்டை போலீஸ் விசாரணையில், வாணரப்பேட்டை ரவுடிகள் வினோத், தீன் துாண்டுதலில், கூலிப்படையை ஏவி, பாம் ரவியை கொலை செய்தது தெரிய வந்தது.கொலையாளிகளுக்கு பணம், ஆயுதம், வாகனங்கள் வழங்கி உதவியதாக வினோத்தின் தாய் ரமணி உள்பட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.இக்கொலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட கூலிப்படை சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கூலிப்படை தலைவன் தியாகு, புனேவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தமிழக போலீசாரின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடினர். அதன்பேரில் அங்கு சென்ற தமிழக போலீசாருக்கு ஏமாற்றமே கிடைத்தது.இந்நிலையில், கூலிப்படை தலைவன் தியாகுவை, காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீசார், ஹரியானா மாநிலத்தில் நேற்று விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைக்க உள்ளனர்.தியாகு மீது தமிழகத்தில் 11 கொலைகள், 15 கொலை முயற்சி வழக்குகள் என 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன.அவரை சிறையில் அடைத்த பிறகு, இரட்டை கொலை வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.