பந்தலுார்;பந்தலுார் அருகே, சேரம்பாடி வனப்பகுதி சாலையில் யானைகள் வருவதை தடுக்க, மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.பந்தலுார் அருகே, சேரம்பாடியிலிருந்து கோராஞ்சால் வழியாக சப்பந்தோடு மற்றும் போத்து கொல்லி பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. வனப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையில், இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும், தண்ணீர் குடிப்பதற்காக யானைகள் வருகின்றன.இங்கு தனியார் ஓய்வு விடுதி அமைந்துள்ள நிலையில், நீரோடை அருகே மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவு, 7:00 மணிக்கு வேலியில் மின்சாரம் வருவதால், யானைகள் தண்ணீர் குடிக்க வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி யானைகள் உயிரிழந்துள்ளன. சேரம்பாடி வனச்சரக அலுவலகம் அருகே, இந்த விதிமீறல் நடந்தும், வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில்,''அப்பகுதிக்கு இன்று(நேற்று) இரவு வன ஊழியர்களை ஆய்வுக்கு அனுப்பி, விதிமீறல் இருந்தால், விடுதி உரிமையாளர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.