நெகமம்:பழநி பாதயாத்திரை சென்ற வாலிபர், பி.ஏ.பி.,கால்வாயில் இறங்கி மாயமானதால், நெகமம் போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.கோவை, புளியகுளத்தை சேர்ந்த குமாரின் மகன் மாரிமுத்து, 19, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், நண்பர்களுடன் பழநிக்கு பாதயாத்திரை கிளம்பினார். நெகமம், உதவிபாளையம் அருகே, நேற்று முன்தினம் காலை, பி.ஏ.பி., கால்வாய் நீரில் இறங்க முயற்சித்தார். சிறிது நேரத்தில் நண்பர்கள் கால்வாய் கரைக்கு வந்த போது, மாரிமுத்துவை காணவில்லை.கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அச்சத்தில், நெகமம் போலீசில் புகார் செய்தனர். நெகமம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, வெள்ளகோவில் வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாரிமுத்துவின் தந்தை குமார், நெகமம் போலீசில் 'குளிப்பதற்காக பி.ஏ.பி., கால்வாயில் இறங்கிய தனது மகனை காணவில்லை' என, புகார் கொடுத்தார்.