நெல்லிக்குப்பம்; மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குட்டையில் கழிவுநீர் தேங்கியதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள கரையான் குட்டையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம் வந்து சேருகிறது. இதனால் குட்டை முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 10 லட்சம் செலவில் குட்டையை துார்வாரி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். அங்கிருந்து தண்ணீர் வெளியேற வழி செய்யாததால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி இடமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகிலுள்ள பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவோர் பாதிக்கின்றனர். இதை சரி செய்ய, தண்ணீரை கால்வாய் மூலம் வெளியேற்றி சுத்திகரித்து பெண்ணையாற்றில் விட ரூ. 33 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. அதற்கான பணிகள் துவங்கியதும் கழிவு நீர் கால்வாய் கட்டினால் சாலை சேதமாகும் என நத்தமேடு மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் தினமும் பல ஆயிரம் செலவு செய்து குட்டையில் உள்ள கழிவுநீரை மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு அனுப்புகின்றனர். செயல் அலுவலரின் அலட்சியத்தால் பேரூராட்சியில் மக்களுக்கு பரவும் நோயை தடுக்க கலெக்டர் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.