காட்டுமன்னார்கோவில்--காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் சிண்டிகேட் அமைத்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ளனர்.இங்கு கடந்த 10 நாட்களாக சம்பா சாகுபடி நெல் அறுவடை துவங்கி நடக்கிறது.ஆட்கள் பற்றாக்குறையால் அறுவடை இயந்திரத்திற்கு அரசின் சரியான வாடகை நிர்ணயம் இல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2,900 முதல் 3,200 வரை வாடகையாக வசூலிக்கின்றனர். இந்த ஆண்டு மழை பாதிப்பு, புகையான் நோய் தாக்குதலால் மகசூலும் குறைந்துள்ளது.அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் நெல் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.அரசு சன்ன ரக நெல்லுக்கு கிலோவிற்கு ரூ. 20. 60 பைசா, மோட்டா ரகத்திற்கு ரூ. 20.15 பைசா விலை நிர்ணயித்துள்ளது. இதனால் 60 கிலோ மூட்டை சன்ன ரகம் ரூ. 1,236; மோட்டா ரகம் ரூ.1,209க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.ஆனால் தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து சன்னரகம் நெல் மூட்டை ரூ. 1050 ; பொன்மனி 1009 போன்ற மோட்டா ரகம் ரூ. 920 என கொள்முதல் செய்கின்றனர்.மூட்டை எடையில் நெல் 60 கிலோ, சாக்கு எடை ஒரு கிலோ என 61 கிலோவிற்கு பதிலாக 63 கிலோ எடை வைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தனியார் வியாபாரிகளை கட்டுப்படுத்தி, அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.