குன்னுார்:குன்னுார் பகுதிகளில், இருவாச்சி பறவைகள் வருகை அதிகரித்துள்ளதால், பறவை ஆர்வலர்கள் வியப்படைந்துள்ளனர்.'கிரேட் ஹார்ன்பில்' எனும், இருவாச்சி பறவைகள், நீலகிரி மலைப்பகுதியில் கல்லாறு, காட்டேரி உட்பட சில இடங்களில் காணப்படுகின்றன. இப்பறவையை காண, நவ., முதல் ஏப்., மாதம் வரை பறவை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். குன்னுார் டென்ட்ஹில் மலைப்பகுதியில், தற்போது இருவாச்சி பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.பறவை ஆர்வலர் முரளி கூறியதாவது:ஒரு வனப்பகுதியில் இருவாச்சி பறவை இருந்தால், அந்த வனம் வளமாக உள்ளது என அர்த்தம். பெரிய இருவாச்சி பறவை, 130 செ.மீ., வரை அகலம், 152 செ.மீ., வரை நீளம் உடைய இறக்கைகளை கொண்டுள்ளது. இதன் எடை, 2 முதல் 4 கிலோ வரை இருக்கும்.உயரமான மரங்களில் கூடு கட்டி வசிக்கிறது. இன பெருக்க காலத்தில், பெண் பறவை கூண்டுக்குள் சென்று அமர்ந்ததும், ஆற்றுப்படுகையில் சேகரிக்கும் ஈரமான மண்ணை கொண்டு, கூட்டை ஆண் பறவை மூடிவிடுகிறது.தனது இறக்கை முழுவதையும் உதிர்க்கும் பெண் பறவை மெத்தை போன்று அமைத்து, அதில் முட்டையிடுகிறது. ஆண் பறவை உணவு எடுத்து வந்து வழங்குகிறது. இரை தேட செல்லும் ஆண் பறவை திரும்ப வரவில்லை எனில், பெண் பறவை கூட்டினுள் உயிரை விடும். இவ்வாறு, அவர் கூறினார்.