திருப்பூர்:'நெடுஞ்சாலைத்துறை பணிகளில் தாமதம் ஏற்படுவதை தடுக்க, கட்டாயம், இரண்டரை ஆண்டுகளுக்குள் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்' என, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாவதால், பாலம் கட்டுமானம் உள்பட நெடுஞ்சாலைத்துறை பணிகள், பல இடங்களில் முடங்கியுள்ளன. திருப்பூரில் மட்டும் மூன்று பெரிய பாலங்கள் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு, நிலம் கையகப்படுத்துவதற்கான காலக்கெடு வரையறுத்து அறிவித்துள்ளது. அதன்படி, முதல் நான்கு மாதங்களுக்குள் நிர்வாக அனுமதி பெற வேண்டும். திட்டம், பணி குறித்த அறிவிப்பை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும். நிலம் எடுப்பு தொடர்பான அறிவிப்பை, 12 மாதங்களிலும், நிலத்துக்கான மதிப்பீட்டை நான்கு மாதங்களிலும் தீர்மானிக்க வேண்டும்.அதற்கான தொகையை, மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும். உரியவர்களிடம் இருந்து நிலத்தை நான்கு மாதங்களுக்குள் நெடுஞ்சாலைத்துறை வசம் மாற்ற வேண்டும். கட்டாயம், இரண்டரை ஆண்டுகளுக்குள் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.