தாம்பரம்--தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, போதிய அளவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நியமிக்கப்படாததால், நிர்வாக குளறுபடிகள் நீடிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாம்பரம் காவல் ஆணையரகம், இம்மாதம் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனராக ரவி நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனர் அலுவலகத்தின் கீழ், 20 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் துவங்கப்பட்டு, 20 நாட்களை கடந்துள்ள நிலையிலும், கமிஷனர் அலுவலகத்தின் கீழ் செயல்படும், காவல் சரகங்களுக்கு, துணை மற்றும் உதவி கமிஷனர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.பல காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் இன்றி, பொறுப்பு காவல் ஆய்வாளர்களே பணியில் உள்ளதால், கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில், குற்ற சம்பவங்களை தடுத்தல் மற்றும் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்தில், அமைச்சுப் பணியாளர்களும் இல்லாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட, காவல் நிலையங்களின் ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட 10 வாகனங்களுக்கு போலீசார் தங்களின், சொந்த செலவில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல், கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, 'மைக்-3' க்கு மட்டும், கட்டுப்பாட்டு அதிகாரியாக கமிஷனர் உள்ள நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, மற்ற மைக்குகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளால், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் போலீசார் திணறி வருகின்றனர்.