சென்னை--உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு வந்த, 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7.84 லட்சம் ரூபாய் சென்ட்ரலில் பறிமுதல் செய்யப்பட்டது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து, சென்னை சென்ட்ரல் வழியாக கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில், நேற்று சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடைந்தது.சென்ட்ரல் நிலைய ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணியரின் உடமைகளை சோதனை செய்தனர்.'பி - 1' பெட்டியில் இருந்த, கோவை, செல்வபுரம், அம்மன் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன், 48. தேனி, எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா தெருவைச் சேர்ந்த ராமநாதன், 25 ஆகியோரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.பைகளை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 4,931.19 கிராம் தங்க ஆபரணங்கள், 7 லட்சத்து, 84 ஆயிரத்து, 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தை விலைப்படி, நகைகளின் மொத்த மதிப்பு 2 கோடியே, 25 லட்சத்து, 89 ஆயிரத்து, 781 ரூபாய். தங்க ஆபரணங்கள், ரொக்க பணம், மாநில ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.