அமைந்தகரை-வாடகை தாயாக இருந்த பெண்ணுக்கு மோசடி செய்த புகாரில், இருதரப்பினரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டம், நெமிலிச்சேரியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், நேற்று முன்தினம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், குடும்ப சூழல் காரணமாக, என் தோழி மூலம், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வாடகை தாயாக இருக்க சம்மதித்தேன்.அதற்கான 5 லட்சம் ரூபாய் பேசி பின், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். கடந்த ஜன., 3ல் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன்பின், ஒரு வாரம் கழித்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என, அனுப்பி வைத்தனர்.ஒரு வாரத்திற்கு பின், குழந்தைகள் இறந்து விட்டதாகவும், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே தர முடியும் என மிரட்டுகின்றனர். இழப்பீட்டு தொகை வழங்கவும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.புகாரை விசாரிக்கும்படி, அமைந்தரை காவல் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டது. நேற்று மாலை இருதரப்பினரையும் காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:இருதரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமாதானமாக செல்வதாக கூறினர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கு, நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று இழப்பீடு தொகை வழங்குவதாக உறுதியளித்துஉள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.