பல்லாவரம்--பழைய பல்லாவரத்தில், ஜல்லி கொட்டியும், சாலை ஒட்டுபோடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல சாலைகள், சமீபத்தில் பெய்த கன மழையில் சேதமடைந்தன. பழைய பல்லாவரம், பெருமாள் நகர் மெயின்ரோடு, குண்டும் குழியுமாக மாறியது. இச்சாலை, அதிக போக்குவரத்து கொண்டது என்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, சீர்குலைந்த இடங்களில், பழைய சாலையை சுரண்டி, ஒட்டு போடுவதற்காக ஜல்லி கொட்டப்பட்டுள்ளது. அரசு விதிமுறைப்படி, சாலை சுரண்டப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.இந்நிலையில், ஜல்லி கொட்டி பல நாட்கள் ஆகியும், ஒட்டுபோடும் பணி கிடப்பிலேயே உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து, புகார் தெரிவித்தும், பல்லாவரம் பொறியியல் பிரிவினர், எதை பற்றியும் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, சாலை ஒட்டுபோடும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.