பேரம்பாக்கம்-பேரம்பாக்கத்தில் சமுதாய கூடம் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் ,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இங்குள்ள காலனி பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன், சமுதாய கூடம் கட்டப்பட்டது.இந்த கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் மண்டபங்களை நாடிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.சமுதாய கூடத்தை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் குப்பை கொட்டும் இடமாகவும், விளம்பரங்கள் ஓட்டும் இடமாகவும், சமுதாயகூடம் மாறியுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய சமுதாய கூடம் கட்ட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பேரம்பாக்கம் ஊராட்சியில் சமுதாய கூடத்தை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.