திறக்காத குழந்தைகள் மையம்; தினமும் வந்து செல்லும் பாம்பு | தேனி செய்திகள் | Dinamalar
திறக்காத குழந்தைகள் மையம்; தினமும் வந்து செல்லும் பாம்பு
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 

தேனி : ரோட்டில் செல்லும் கழிவுநீர், காட்சி பொருளான தண்ணீர் தொட்டி, திறக்காத குழந்தைகள் மையம், சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள், எரியாத தெருவிளக்கு, வீடுகளுக்குள் நுழையும் பாம்புகள் என பல்வேறு பிரச்னைகளை தேனி ஓண்டிவீரன் நகர் காலனி மக்கள் தினமும் பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.



தேனி நகராட்சி 10, 12, 14 வார்டுகளுக்குள் வரும் இந்த காலனியில் 350க்கும் அதிக குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல பிரச்னைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இதுபற்றி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் அளித்தாலும் தீர்வு மட்டும் கிடைக்கவே இல்லை. காலனியில் குடியிருக்கும் முருகன், மொக்கையன், கிருஷ்ணசாமி, செல்வராஜ், வீரய்யா ஆகியோர் கூறியதாவது:

திறக்காத குழந்தைகள் மையம்''ஓண்டிவீரன் நகர் காலனி கிழக்கு பகுதி மேடாக உள்ளது. இங்குள்ள 5 தெருக்களில் 100 வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் வருவது இல்லை. எனவே, அருகே உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீர் சேகரித்து வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் மையம் 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. அருகேயுள்ள சமுதாய கூடத்தில் குழந்தைகள் மையம் செயல்படுகிறது. நிகழ்ச்சிகள் ஏதேனும் சமுதாய கூடத்தில் நடந்தால் குழந்தைகள் மையம் செயல்படுவது இல்லை. குடிநீர் தவிர பிற பயன்பாடுகளுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகள் உடைந்துள்ளன. மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி காட்சி பொருளாகி உள்ளது. ரேஷன் வாங்க ஒரு கி.மீ., தொலைவில் உள்ள பெரியகுளம் ரோடு கால்நடை துறை அலுவலகம் அருகே செல்ல வேண்டியுள்ளது. இங்கு ரேஷன் கடை அமைக்க வேண்டும்.பாம்பு படையெடுப்பு தெருவிளக்குகள் எரியாததால் இருளில் தவிக்கிறோம். தேனி அதனை சுற்றிய பகுதிகளில் பிடிக்கும் பாம்புகள் அருகேயுள்ள வனத்துறை கரட்டில் விடப்படுகிறது. இந்த பாம்புகள் தினமும் குடியிருப்புகளுக்குள் நுழைகிறது. இதை தடுக்க வேண்டும்.

துாய்மை பணிகள் சரியாக நடைபெறாமல் உள்ளது. கொசு மருந்து தெளிப்பு இல்லை. தரைப்பாலம் இல்லாததால் மெயின் ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. கக்கன்ஜி காலனியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் ஊராட்சி துவக்க பள்ளியின் பின்புறம் தேங்குகிறது. இது கொசுக்கள் உற்பத்தி கூடமாக மாறியுள்ளது. பள்ளி முன்புள்ள தொழில்கூடம் இரவில் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது. மதுபோதை நபர்கள் பாட்டில்களை உடைப்பதால் அது மாணவர்களின் கால்களை பதம்பார்க்கிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் ஓண்டிவீரன் நகர் காலனியை ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும்'' என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X