பொன்னேரி--சேதமடைந்து இருந்த சாலைகள் சீரமைக்கப்படுவதால், 15 ஆண்டுகால பிரச்னைக்கு விமோசனம் கிடைத்து உள்ளது.மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம், கோகலே தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, அண்ணா தெரு ஆகியவை சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் இருந்தன. சாலைகளை சீரமைக்க கோரி, வார்டு உறுப்பினர் லட்சுமி மற்றும் குடியிருப்புவாசிகள் தொடர்ந்து வலியறுத்தி வந்தனர்.அதை தொடர்ந்து, தற்போது, 14வது நிதிக் குழு மானியம் மூலம், 15 லட்சம் ரூபாய் நிதியில் மேற்கண்ட சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.அதற்காக, நேற்று, சாலைகள், ஜே.சி.பி., மூலம் தோண்டப்பட்டு, மேடு பள்ளங்கள் சமன் செய்யப்பட்டது. தலைவர் பாபு, துணை தலைவர் சபிதா, வார்டு உறுப்பினர்கள் பாலாஜி, லட்சுமி ஆகியோர் மேற்பார்வையில், சாலைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த 15 ஆண்டுகளாக சேதமடைந்து இருந்த நிலையில், தற்போது சீரமைக்கப்படுவதால் மேற்கண்ட சாலைகளுக்கு விமோசனம் கிடைத்து உள்ளது.