திண்டுக்கல் : திண்டுக்கல்லில் முகக்கவசம் அணியாமல் திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க 38 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 652 பேர் பலியான நிலையில் நேற்று முன்தினம் மேலும் ஒருவர் பலியானார். இருப்பினும் மக்கள் கொரோனா பரவல் பற்றிய அச்சம் சிறிதும் இல்லாமல் திரிகின்றனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மற்ற மாவட்டங்களை விட திண்டுக்கல்லில் குறைவாக இருந்த கொரோனா பரவல் கடந்த ஒரு வாரத்தில் விரைவாக அதிகரித்து வருகிறது. இதுவரை முதல் தவணை 16.86 லட்சம் பேர், 2ம் தவணை 12.87 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதத் தொகையை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தியுள்ளனர்.
இதையடுத்து முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதார துறையில் 38 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மார்க்கெட், பஸ்டாண்ட், கடை வீதிகள், அலுவலகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றன.