வைகை அணைக்கு பெரியாறு, முல்லை ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு இவற்றின் மூலம் நீர்வரத்து உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் வைகை அணை நீர்மட்டம் நவ.,10ல் 69 அடியை கடந்தது. (அணை உயரம் 71 அடி.) 70 நாட்களுக்கு மேலாக அணை நீர்மட்டம் 69 அடியில் உள்ளது. வைகை அணையிலிருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 719 கனஅடி நீர் வெளியேற்றுவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கும் ஆற்றின் வழியாக செல்கிறது.
கோடை சாகுபடி வாய்ப்புவைகை ஆற்றின் வழியாக நீர் திறக்கும் போது சீரங்காபுரம், அய்யணதேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, டி.அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட வைகை ஆற்றின் கரையோர கிராமங்களில் பல ஆயிரம்ஏக்கரில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். இதனால் இப்பகுதி நிலங்களில் சாகுபடி அமோகமாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி நீர் பற்றாக்குறையால் கோடை சாகுபடியை தவிர்த்து விடுவர்.
பல ஆண்டுக்குப்பின் தற்போது மழைக்காலம் முடிந்தும் வைகை அணை நீர்மட்டம் 69 அடியை கடந்து முழுஅளவில் உள்ளது. இதனால் வைகை அணையில் முழு அளவில் நீர் உள்ளதால் கோடையிலும் விவசாயத்தை தொடர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்த நெல், வாழை, காய்கறிகள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. அறுவடை முடிந்தபின் கோடையிலும் விவசாய பணிகள் துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.