காஞ்சிபுரம்-வெங்கச்சேரி தரைப்பாலத்தின் ஒரு பகுதி உள்வாங்கியுள்ளதால், மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, வெங்கச்சேரி செய்யாற்று குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம், இரு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்தது. போக்குவரத்து முற்றிலும் தடை ஏற்பட்டது.தொடர்ந்து, ஆற்றில் தண்ணீர் சென்றதால் உடைப்பு ஏற்பட்ட தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க முடியவில்லை.தற்காலிகமாக சிமென்ட் குழாய்கள் பதித்து, மண் கொட்டி ஒரு வாரத்திற்கு முன் போக்கு வரத்து துவக்கப்பட்டது.இந்நிலையில், செய்யாற்று தரைப்பாலத்தின் வடக்கு பகுதியில் உடைப்பு ஏற்படாமல் இருந்ததால் அந்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் மண்கொட்டி வேலை நடந்தது. தற்போது அந்த பகுதியும் உள்வாங்கியுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் சென்றால் பாலம் உடைந்து விபத்து ஏற்படும். எனவே, பாலத்தின் இரு பகுதிகளிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை என, நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் மாகரல் காலனி பகுதிக்கு செல்லும் வழியில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து வெங்கச்சேரிக்கு பயணியர் நடந்து உத்திரமேரூர் செல்கின்றனர்.அதேபோல் உத்திரமேரூர் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் மக்கள் வெங்கச்சேரியில் இறங்கி, நடந்து சென்று மாகரல் அருகில் நிற்கும் பஸ்சில் ஏறி, காஞ்சிபுரம் செல்ல வேண்டும்.பொதுமக்கள் கூறியதாவது:இரு மாதங்களாக இந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் சிரமமாக இருந்தது. போக்குவரத்து இயக்கப்பட்ட பின், இயல்பு வாழ்க்கை சீரானது. தற்போது மீண்டும், ஆற்றில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வாக மேம்பாலம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.